இந்துஸ்தான் யூனிலிவரில் இருந்து தனியாக பிரியும் ஐஸ்கிரீம்..
இந்தியாவில் பிரபல பிராண்டான இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தில் இருந்து ஐஸ்கிரீம் வணிகம் தனியாக பிரியும் வகையில், அந்த நிறுவன இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஐஸ்கிரீம் வணிகம் மட்டும் தனியான சுதந்திரமான அமைப்பாக இயங்கும் என்றும், முதலீட்டாளர்களின் அதிகப்படியான நம்பிக்கையை பெற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சுற்று ஒப்புதல் அடுத்தாண்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பரில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் வணிகத்தை நிர்வகிக்க தனி குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரிலேயே ஐஸ்கிரீமுக்கு தனி வணிகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் வணிகம், மிகப்பெரிய வரவேற்பு கொண்ட பிராண்டுகளான குவாலிட்டி வால்ஸ், கார்நெட்டோ, மேக்னம் ஆகியவை நல்ல லாபம் தரக்கூடியவை. ஏற்கனவே யுனிலிவர் நிறுவனம் உலகளவில் ஐஶ்கிரீம் வணிகத்தை தனியாக பிரித்துவிட்ட நிலையில் ,இந்தியாவிலும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் தனது ஐஸ்கிரீம் வணிகத்தை தனியாக பிரிப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி ரோஹித் ஜவா கூறியுள்ளார். ஐஸ்கிரீம் வணிகம் மட்டும் தனியாக பிரியும்பட்சத்தில் தனியான நிர்வாகம், வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட உத்திகள் கையாளப்படும் என்று இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது