விடாது கருப்பு போல தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை!!!
லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த அமேசான்நிறுவனம் மேலும் ஒரு சுற்று ஆட்குறைப்பு செய்ய திட்டம் தீட்டி வருகிறது. இ-காமர்ஸ் பிரிவில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் தனது விளம்பரப்பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணிகளை தொடங்கியிருக்கிறது. முதல்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிற நாடுகளில் அந்தந்த தொழிலாளர் அமைப்புகளுடன் பேசிவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அந்நிறுவனத்தில் 18 ஆயிரம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 9 ஆயிரம் பேர் வரை வேலை இழப்பை சந்திக்கும் சூழல் உண்டாகியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கணக்கு வழக்கு இல்லாமல் ஆட்களை எடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வரும் அமேசான் நிறுவனம் தற்போது ஆட்குறைப்பில் கவனம் செலுத்தியுள்ளது. இது ஒருபக்கம் இருக்கையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஊழியர்களில் பேஸ்புக்,வாட்ஸ்ஆப்,இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களில் இருந்து ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. செலவை மிச்சப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணிகளை பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது. கடந்த மாதம் 10 ஆயிரம் பேரை நீக்க திட்டமிட்ட மார்க் ஜூக்கர்பர்க் அதற்கான பணிகளை செய்ய நிறுவன மேலாளர்களுக்கு ஆணையிட்டிருந்தார். இது மட்டுமின்றி வரும் மே மாதம் மேலும் சில துறைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த நிறுவனம் 13 விழுக்காடு பணியாளர்களை குறைத்துள்ளது. தற்போதுள்ள அமைப்பு மற்றும் பணி கலாச்சாரத்தை அப்படியே மாற்றியமைக்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய மேலாளர்களின்கீழ் பணியாற்ற டெக் பணியாளர்களுக்கு மெட்டா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.