டிரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு..

அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டு காங்கிரஸ் பிரதிநிதிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு இந்தியா 100 விழுக்காடுக்கும் அதிகம் வரி வசூலிப்பதாகவும், இந்த சிஸ்டமே சரியில்லை என்றும் கூறியுள்ளார். இதனை சரி செய்யும் வகையில் ரெசிபுராக்கல் டாக்ஸ் எனப்படும் பதில் வரியை வரும் 2 ஆம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாகவும் அறிவித்தார். ஏற்கனவே மெக்சிகோ, கனடா, சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு டிரம்ப் அதிக கட்டணங்களை விதித்து அதிர வைத்தார். இந்த சூழலில் முதல் சுற்று தாக்குதலில் இந்தியா பெரியளவு பாதிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது ரவுண்டில் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகள்தான் டிரம்பின் அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்படும் என்றும் கட்டணங்கள் 4% முதல் 6 % வரை உயரும் என்றும் நிபுணர்கள் பட்டியல் இடுகின்றனர். டிரம்பின் அறிவிப்புகளால் ஆண்டுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இந்தியா இழக்க நேரிடும் என்றும், விவசாயம்,ஆட்டோமொபைல் துறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ரசாயனங்கள், உலோகங்கள், நகைகள் ஆட்டோமொபைல், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா-அமெரிக்கா இடையே 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் நடத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த சூழலில் வரும் அக்டோபருக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வணிகம் இயல்பாக நடத்த வழிவகை செய்யப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக பதட்ட நிலையை போக்கும் வகையில் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறிப்பாக அமெரிக்க மோட்டார்சைக்கிள்களின் வரியை 30 விழுக்காடும், போர்பன் ரக விஸ்கிகளுக்கு 50 விழுக்காடு வரியையும் இந்தியா குறைத்துள்ளது. இதனிடையே இந்திய அமைச்சர் பியூஷ் கோயில் திடீரென அமெரிக்காவுக்கு சுற்றப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.