இசுசூவை வாங்கிய மஹிந்திரா..

லாரி மற்றும் பேருந்துகளை தயாரிக்கும் இசுசூ நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை மஹிந்திரா வாங்கியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசுசூ நிறுவனத்தின் 63.62லட்சம் பங்குகளை அதாவது அந்த நிறுவனத்தின் 58.96%பங்குகளை மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் 555 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டது. ஒரு பங்கின் விலை 650 ரூபாயாக இருக்கிறது. சுமிடோமோ கார்பரேஷன் என்ற நிறுவனம் இசுசூவின் புரமோட்டர் நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் 413 கோடி ரூபாய் பங்குகளை மஹிந்திரா நிறுவனம் வாங்கியுள்ளது.
இது மட்டுமின்றி இசுசூ மோட்டார் நிறுவனத்தின் 21.79லட்சம் பங்குகளையும் ஆனந்த் மஹிந்திரா வாங்கியுள்ளார். 3.5டன் எடை கொண்ட வணிக வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் சூழலில் தற்போது அந்த வகையில் மஹிந்திராவின் பங்கு 3 விழுக்காடு மட்டுமே உள்ளது. ஆனால் 3.5 டன் எடைக்கு கீழ் எடை கொண்ட இலகு ரக வாகனங்கள் சந்தையில் மஹிந்திராவின் பங்கு 52 விழுக்காடாக உள்ளது.
இசுசூ நிறுவன பங்குகளை கைப்பற்றுவது தங்கள் நிறுவனத்துக்கு மிகமுக்கிய மைல்கல் என்று மஹிந்திரா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அனிஷ் ஷா கூறியுள்ளார். வணிக வாகனங்கள் பிரிவில் முக்கியமான நிறுவனமாக வலம் வர இசுசூவின் பங்குகளை வாங்கியது உதவும் என்றும், விநியோகஸ்தர் மற்றும் தரகர்கள் நெட்வொர்க்கை ஒன்று சேர்க்க இது உதவும் என்று மஹிந்திரா அன்ட் மஹிந்திராகுழுமத்தின், ஆட்டோ மற்றும் விவசாயத்துறை தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஜெஜூரிக்கர் தெரிவித்துள்ளார்.