ஒரு பங்குக்கு 56 ரூபாய் டிவிடன்ட் தரும் பஜாஜ் ஃபின்சர்வ்..

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின்சர்வ், செவ்வாய்க்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ரெக்கார்ட் தினத்தில் ஒரு பங்கு வைத்திருந்தால் அந்த முதலீட்டாளர்களுக்கு 4 கூடுதல் பங்குகள் கிடைக்கும். இது தொடர்பாக அந்த நிறுவன இயக்குநர்கள் குழுவும் மற்றொரு பரிந்துரையை அளித்துள்ளது. அதன்படி, ஒரு பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு 2 ஈக்விட்டி பங்குகள் அளித்துவிடலாம் என்பதே புதிய அறிவிப்பு. 2025 நிதியாண்டின் கடைசி காலாண்டின் வரவு செலவு கணக்குகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, அந்த நிறுவனத்தின் நிகர லாபம் 19 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதாவது கடந்த காலாண்டில் மட்டும் 4 ஆயிரத்து 546 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. அந்நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் மட்டும் 22 விழுக்காடு உயர்ந்து 9 ஆயிரத்து 807 கோடிரூபாயாக இருந்தது. இது கடந்த 2024 நிதியாண்டின் கடைசி காலாண்டை ஒப்பிடுகையில் அதிகமாகும். கடந்த 2024நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்த தொகை 8 ஆயிரத்து 013 கோடி ரூபாயாக இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் மற்றொரு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி, இடைக்கால டிவிடண்ட்டாக 12 ரூபாய் அளிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த பணம் வரும் 26 ஆம் தேதி கிடைக்க இருக்கிறது. ஈக்விட்டி பங்குகள் மூலமாக இறுதி டிவிடண்ட்டாக ரூ.44 கிடைக்க உள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு பிறகு ஜூலை 28 ஆம் தேதி இந்த பணம் பங்குதாரர்களுக்கு கிடைக்கும். பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 26 விழுக்காடு உயர்ந்து 4லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் 10 கோடி வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. கடந்த நிதியாண்டில் மொத்தமாக 16,779 கோடி ரூபாய் நிகர லாபம் அந்நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.