ஃபாக்ஸ்கான் இந்தியாவின் வருவாய் 20பில்லியன் டாலர்.

தைவானை பூர்விகமாக கொண்டு இயங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பிரிவின் வருமானம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது 2024-25 நிதியாண்டில் மட்டும் நடந்த மாற்றமாகும். ஐஃபோன் உற்பத்தியை தொடங்கிய பிறகே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய கிளையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.
2024-25 நிதியாண்டில் மட்டும் 2லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஃபோன்கள் ஏற்றுமதியை இந்தியா செய்திருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி ஐபோன் ஏற்றுமதி மட்டும் 1.5லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். ஐபோன் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக, பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் இரண்டாவது ஆலையை ஃபாக்ஸ்கான் அமைத்து வருகிறது. இதே நிறுவனம் உத்தரபிரதேசத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆலையை அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மொபைல் போன்கள் மட்டுமின்றி ஐதராபாத்தில் ஐபாட்களையும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. எச்சிஎல் நிறுவனத்துடன் இணைந்து பாக்ஸ்கான் நிறுவனம் செமிகண்டக்டர் ஆலையையும் அமைத்து வருகிறது. இந்த கூட்டு நிறுவனம் 3,706 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. Osat வசதியை இந்த நிறுவனம் அளிக்க இருக்கிறது. இதன் மூலம் 4,000 பேர் வேலைவாய்ப்பு பெற இருக்கின்றனர்.