40 விழுக்காடாக சரிந்த மாருதி சந்தை மதிப்பு..

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் சந்தை மதிப்பு கடந்த ஏப்ரலில் மட்டும் 40 விழுக்காடாக குறைந்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர் அசோசியேஷன்ஸ் எனப்படும் ஃபாடா என்ற அமைப்பு ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் மாருதி சுசுகி நிறுவனம் சரிந்துள்ளதையும், இரண்டாம் இடத்துக்கு மஹிந்திரா அன்ட் மஹிந்திரா சென்றதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இரண்டாம் இடம்பிடித்து வந்த ஹியூண்டாய் நிறுவனம் 4 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. வழக்கம் போல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3 ஆம் இடம்பிடித்துள்ளது. 2024 ஏப்ரலில் விற்பனையான பயணிகள் வாகனத்தின் எண்ணிக்கை 3.44லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த மாதம் 3.49லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் மாருதி சுசுகியின் வாகனங்கள் மட்டும் 1.38லட்சமாகும். இது மொத்த சந்தை பங்களிப்பில் 39.44விழுக்காடாகும். கடந்தாண்டு 1.39லட்சம் வாகனங்களை அந்த நிறுவனம் விற்றது. ஏப்ரல் மாதத்தில் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் 48 ஆயிரத்து 405 கார்களை விற்றுத்தள்ளியுள்ளது. 13.83விழுக்காடு அளவுக்கு சந்தை பங்களிப்பை அந்நிறுவனம் கொண்டுள்ளது. ஹியூண்டாய் நிறுவனம் 43 ஆயிரத்து 642 கார்களை ஏப்ரலில் விற்றுள்ளது. கடந்தாண்டு இந்த நிறுவனத்தின் பங்களிப்பு 14.29 விழுக்காடாக இருந்த நிலையில் தற்போது 12.47 விழுக்காடாக வீழ்ந்துள்ளது. மார்ச்சுடன் முடிந்த நிதியாண்டில், டாடா மோட்டார்ஸ் விற்பனை மட்டும் 5.35லட்சமாக இருந்தது. இதன் சந்தை பங்களிப்பு 12.9 விழுக்காடாகும். கடந்தாண்டு அதாவது 2023-24 நிதியாண்டில் இந்த விகிதம் 13.62விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.