காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் டாடா..

மோட்டார் வாகன தயாரிப்பில் தனித்துவமாக திகழும் மும்பையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக ஒரு சிறப்பான தரமான திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் சேர்ந்து 131 மெகாவாட் அளவுக்கு சூரிய ஆற்றல் மற்றும் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 30 கோடி யூனிட் மின்சாரத்தை இந்த புதிய ஆலை தயாரிக்க இருக்கிறது. இந்த திட்டம் அமலானால் 2 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றம் ஆண்டுதோறும் தடுக்கப்படும். சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை மின்சாரத்தை ஒருங்கிணைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலைகளுக்கு இந்த மின்சாரம் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. தங்கள் ஆலைகளில் புதுப்பிக்கத் தக்க ஆற்றலைத்தான் பயன்படுத்த இந்த திட்டம் உதவும் என்று டாடா மோட்டார்ஸின் துணைத் தலைவர் விஷால் பாட்ஷா தெரிவித்துள்ளார்.