மெல்ல திரும்பும் விமான சேவை..

டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் விமானப்பணியாளர்கள் திடீரென உடல்நலம் சரியில்லை என்று கூட்டமாக விடுப்பு எடுத்தனர். இதனால் அதிர்ந்து போன ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வேறு வழியின்றி 170 விமானங்களின் சேவைகளை நிறுத்தியது. இதனால் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் 25 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தனர். இதன் காரணமாக விமான பணியாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரச்சனை பெரிதாகிவிட்டதை உணர்ந்த டாடா குழுமம், 25 பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொண்டது. இந்த நிலையில் பிரச்சனை சீரடைந்ததால் பணியாளர்கள் மீண்டும் பழையபடி வேலைக்கு திரும்பினர். இதன் காரணமாக அடுத்த 2 நாட்களில் விமான சேவை இயல்புநிலையை எட்டும் என்று நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். சம்பள பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்க விமான பணியாளர்கள் சங்கம் வரும் 28 ஆம் தேதி மீண்டும் கூடி விவாதிக்க உள்ளனர். சமமாக பணியாளர்களை நடத்த வில்லை என்பதுதான் பணியாளர்கள் திடீரென மாஸாக லீவ் போட முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஒரே அறையில் பல பணியாளர்கள் தங்க வைப்பது, போதிய சம்பளம் இல்லை உள்ளிட்ட காரணங்களை பணியாளர்கள் முன்வைக்கின்றனர். இதே பிரச்சனைகளை முன்னிறுத்தி கடந்த மாதமே விஸ்தாரா நிறுவன விமானிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த மாதம் 10 விழுக்காடு விமான சேவை ரத்தானது. மீண்டும் இதே பிரச்சனையை டாடா குழுமம் சந்தித்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா கணெக்ட் ஆகிய நிறுவனங்களை ஒரு பிரிவாகவும், விஸ்தாரா- ஏர்இந்தியா நிறுவனங்களை மற்றொரு பிரிவாகவும் டாடா குழுமம் இணைத்துள்ளது.