கோவை நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஆப்பிள் நிறுவனம்

உலகளவில் பிரபல நிறுவனமாக திகழும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்து மேலும் இரண்டு நிறுவனங்கள் பொருட்களை சப்ளை செய்ய இருக்கின்றன. இந்த பட்டியலில் விப்ரோ மற்றும் லக்ஷ்மி மிஷின் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன. ஏற்கனவே டாடா குழுமம், மதர்சன் குரூப், பாரத் ஃபோர்ஜ் ஆகிய நிறுவனங்களும் ஏற்கனவே இந்தியாவில் இருந்து பொருட்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு அளித்து வருகின்றன. விப்ரோ நிறுவனம் ஹைட்ராலிக்ஸ், வாட்டர் டிரீட்மென்ட், ஒட்டும் பசை, விமானபாகங்கள் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. இது மட்டுமின்றி விப்ரோ கன்சியூமர் கேர் மற்றும் லைட் உற்பத்தியையும் விப்ரோ நிறுவனம் தயாரித்து வருகிறது. லக்ஷ்மி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனம் கோவையை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம், துணி தயாரிப்புக்கான இயந்திரங்கள் , சிஎன்சி, விமான உதிரி பாகங்களையும் தயாரித்து வருகின்றது. இந்தியாவிற்கு ஆர்டர்களை தருவதன் மூலம் விலையும் குறைவு அதே நேரம் விரிவான தொடர்பு சங்கிலியும் விநியோகத்தில் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. உற்பத்திக்கு சீனாவை மட்டும் நம்பாமல் இந்தியாவையும் ஒரு உற்பத்தி செய்யும் நாடாக மாற்றுவதில் ஆப்பிள் நிறுவனம் தெளிவாக உள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்., கடந்த ஜனவரியில் புனேவைச் சேர்ந்த நிறுவனமான பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இந்நிலையில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் கோவையைச் சேர்ந்த நிறுவனமும் இணைந்திருப்பது ஆப்பிள் நிறுவனம், அதன் திட்டத்தை இந்தியாவில் விரிவுபடுத்துவதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.