பங்குகளை மாற்றி வரும் ஏத்தர் நிறுவனம்..

முன்னணி மின்சார பைக் விற்பனை நிறுவனமாக திகழும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது சிசிபிஎஸ் பங்குகளை ஈக்விட்டியாக மாற்றி வருகிறது. ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வரும் இந்நிறுவனம் பங்குகளை மாற்றும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஏத்தர் நிறுவனத்தின் ஆரம்ப பங்குகள் வரும் ஏப்ரலில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கட்டாய முன்னுரிமைபங்குகளில் 1.73 கோடி பங்குகளை 24.04கோடி ஈக்விட்டி பங்குகளாக மாற்றுவதற்கு கடந்த மார்ச் 8 ஆம் தேதி ஏத்தர் நிறுவனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த பங்குகளின் முகப்பு மதிப்பு 1 ரூபாயாக உள்ளது. 2026 நிதியாண்டின் முதல் ஐபிஓவாக ஏத்தர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய மின்சார பைக் ஆலையை தொடங்க ஏத்தர் நிறுவனத்துக்கு நிதி தேவைப்படுவதால், அவர்கள் பொதுவெளியில் நதியை திரட்டுகின்றனர்.
ஏற்கனவே உள்ள பங்குதாரர்களிடம் இருந்து 2.2 கோடி பங்குகளாகவும், புதிதாக ஈக்விட்டி வழியாக 3ஆயிரத்து 100 கோடி ரூபாயையும் திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பொதுவெளியில் நிதி திரட்டும் இரண்டாவது நிறுவனமாக ஏத்தர் மாற உள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 6,145 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆரம்ப பங்குகளை வெளியிட்டது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். ஆலை விரிவாக்கத்துடன் சேர்த்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்கவும் ஏத்தர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவின் பேகூர் பகுதியில் புதிய ஆய்வு மையத்தையும் அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.