1,400விழுக்காடு ரிட்டர்ன்ஸ் உறுதி-ஏதெர்..

மின்சார பைக் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஏதெர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தைகளில் வரும் 28 ஆம் தேதி தனது ஆரம்ப பங்குகளை வெளியிட இருக்கின்றது. இது இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்த நிறுவனம் லாபத்தை பதிவு செய்யவில்லை. ஐபிஓ எனப்படும் ஆரம்ப பங்கு வெளியீட்டின் மூலம் 2981 கோடி ரூபாய் நிதியும் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 19லட்சத்து 60ஆயிரம் பங்குகளை 355 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 304 முதல் 321 ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 321 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கினால் 1422விழுக்காடு லாபம் கிடைக்கும் என்கிறது ஏதெர்.. 2014ஆம் நிதியாண்டு முதல் இயங்கி வரும் ஏதெர் நிறுவனம், தொடர்ந்து இழப்பை மட்டுமே சந்தித்து வருகிறது. 2024ஆம் ஆண்டு ஏதெர் நிறுவனத்தின் இழப்பு ஆயிரத்து 59 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்தாண்டு இது 864 கோடி ரூபாயாக இருந்தது. 2022-ல் இது வெறும் 344 கோடி ரூபாயாக இருந்தது. பல ஆண்டுகளாக மின்சார ஸ்கூட்டர்கள் விற்றாலும் ஓலா, டிவிஎஸ் நிறுவனங்களை விட குறைவாகவே ஏதெர் நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர்களை விற்று வருகிறது. தற்போது இழப்புகளை சந்தித்து வந்தாலும், நீண்டகால அடிப்படையில் ஏதெர்லா பம் தரும் என்று அதன் முதலீட்டு நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப், டைகர் குளோபல் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப பங்கு வெளியீட்டில் கிடைக்கும் பணத்தை வைத்து மகாராஷ்டிராவில் புதிய ஆலையையும் ஏதெர் நிறுவனம் தொடங்க இருக்கிறது. ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் 3 நாட்கள் ஐபிஓ வரும் புதன் கிழமை முடிந்துவிடும். மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இந்த நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட இருக்கின்றன.