பயான் கேபிடலுடன் டீல்..

தங்கநகைக்கடன் வழங்குவதில் பெயர் பெற்ற மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் பயான் கேபிடல் நிறுவனம் வணிக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அண்மையில் விதிகளை மீறியதாக ஆசிர்வாத் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் மீது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த தடை அண்மையில் விலக்கிக்கொள்ளப்பட்டது. நந்தகுமார் வி.பி. என்பவர் வசம் தற்போது 35.25விழுக்காடு அளவுக்கு மணப்புரம் நிறுவன பங்குகள் உள்ளன. இது சந்தை மூலதனத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாயாகும். முதல்கட்டமாக மணப்புரம் நிறுவனத்துக்கு புதிதாக நிதி ஒதுக்குவதற்கும், பங்குகளை விற்பதற்கும் இந்த வணிக ஒப்பந்தம் வழி வகுக்கிறது. 10,000 கோடி ரூபாய் வரை ஈக்விட்டி பங்குகளை பயான் கேபிடல் நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி நிர்வாக செலவுகளை பயான் கேபிடல் நிறுவனமே பார்க்கும் அளவுக்கு டீல் முடிந்துள்ளது. மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைவதற்கு முன்பு ஐடிஎப்சி, பூனாவாலா பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பயான் நிறுவனம் பணியாற்றியுள்ளது. மணப்புரம் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 9.5விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கடந்த டிசம்பரில் 44ஆயிரத்து 217 கோடி ரூபாயாக இருந்தது. அந்நிறுவனத்தின் தங்க நகை வணிகம் மட்டும் 18.8விழுக்காடு விலை உயர்ந்து 24,504 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் தங்க நகைக்கடன் சந்தை 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இறுதியில் இது வெறும் 7.1 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.