நாங்களும் போருக்கு தயார்: சீனா

சீனாவை சமமாக மதிப்பளித்து அமர்ந்து பேசினால் அனைத்து பிரச்சனையையும் தீர்க்கலாம் என்றும், பிரச்சனையை வளர்க்க விரும்பினால் நாங்களும் அனைத்து விதமான போர்களுக்கும் தயார் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கனடா மற்றும் மெக்சிகோ மீது 25% கூடுதல் கட்டணமும், சீனா மீது 10 % கூடுதல் கட்டணமும் விதிக்கும் முறையை அதிபர் டிரம்ப் தொடங்கி வைத்தார். இதற்கு பதிலடியாகத்தான் அனைத்து போர்களுக்கும் நாங்களும் தயார் என்று சீனா எச்சரித்துள்ளது. சீனா மீதான கூடுதல் வரி விதிப்பால் வணிக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது இருநாட்டு பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றும் அமெரிக்காவில் ஏற்கனவே விலைவாசி உயர்வு அதிகம் இருக்கும் நிலையில், இது அந்நாட்டு மக்களை வெகுவாக பாதிக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் நடந்து வருகிறது. தற்போது அமெரிக்கா அறிவித்துள்ள புதிய கட்டண விதிகளால் இருநாடுகளுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்க காங்கிரஸில் பேசிய அதிபர் டிரம்ப், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க பொருட்களுக்கு, இந்தியா, தென்கொரியா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் பிற நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அவர்கள் மீது பதில் வரி விதிக்க இதுவே சரியான தருணம் என்றும், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் புதிய அதிக கட்டணம் விதிக்கும் முறை அமலாக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.