வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, உயர்த்தப்பட்ட கட்டணம் இன்று காலை முதல் அமலுக்கு வந்துவிட்டது. மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உஜ்வாலா திட்டம் மற்றும் சாதாரண பொதுமக்களுக்கு விற்கப்படும் சிலிண்டர் என அனைத்து வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையும் தலா 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது. என்றார். அதன்படி உஜ்வாலா திட்ட சிலிண்டர் 550 ரூபாயாகவும், சாதாரண சிலிண்டர் விலை டெல்லியில் 853 ரூபாயாகவும் விற்கப்படும் என்றார். எல்பிஜி சிலிண்டரின் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை அரசு பகுப்பாய்வு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். முன்னதாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் குறைந்துள்ள போதும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த கலால் வரி குறித்து அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் 2 ரூபாய் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளபோதும், பெட்ரோல், டீசல் விலை சில்லறையில் மாற்றம் இருக்காது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தாது என்று உறுதியளித்திருப்பதாக பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய பூரி, கேஸ் விலை உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.