மஸ்குக்கு தரவில்லை என அரசு மறுப்பு..

பிரபல தொழிலதிபரும் உலகின் பெரும்பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தொலைதொடர்புத்துறை மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சர் பெம்மாசனி சந்திர சேகர், 2023 தொலைதொடர்புத்துறை சட்டத்தின் அடிப்படையில் இதுவரை ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்படவில்லை என்றார். செயற்கைக்கோள் சார்ந்த அலைக்கற்றை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பதில் அளித்த அவர், நிர்வாக ரீதியாக அலைக்கற்றைக்கும் சில கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல் , விலை நிர்ணயம் செய்தல், செயற்கைக்கோள் சார்ந்த சேவைகள் குறித்து பரிந்துரைகளை டிராய் அமைப்பு வழங்கலாம் என்று ஏற்கனவே தொலைதொடர்புத்துறை அறிவித்துள்ளதாகவும் இணையமைச்சர் கூறியுள்ளார். ஒருங்கிணைந்த உரிமம் யார் விண்ணப்பித்தாலும் கிடைக்கும் என்றபோதிலும், செயற்கைக்கோள் அடிப்படையிலான தொலைத்தொடர்பு சேவைகளுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகள் இந்திய அரசால் நிர்ணயிக்கப்படும், இந்த விதிகளுக்கு உட்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே அந்த உரிமத்தை இயக்க அனுமதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.