எச்.சிஎல் நிறுவன லாபம் 8%உயர்வு..

முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது 4 ஆவது காலாண்டில் 8 விழுக்காடு லாபத்தை பதிவு செய்துள்ளது. மொத்த லாபத்தின் மதிப்பு 3,986 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவன செயல்பாட்டு செலவு மட்டும் 6 % உயர்ந்து 30,246 கோடி ரூபாயாக உள்ளது. கிடைத்த லாபத்தை பங்குதாரர்களுக்கு அளிக்கும் வகையில் , ஒவ்வொரு பங்குதாரருக்கும் தலா 18 ரூபாய் டிவிடன்ட் வழங்கவும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் முடிவெடுத்துள்ளனர். இதற்கான ரெக்கார்ட் தேதியாக வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 6 ஆம் தேதி இந்த டிவிடண்ட் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சேவைத்துறை வருவாய் 0.7% உயர்ந்துள்ளது. புதிதாக 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களை அந்நிறுவனம் பெற்றுள்ளது. 2026 நிதியாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி 2-5%ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேவைத்துறை வளர்ச்சியும் அதே அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் எச்.சி.எல் நிறுவனத்தின் மொத்த வருவாய் 1.17லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. எச்.சிஎல் நிறுவனத்தில் 2025 நிதியாண்டில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 2லட்சத்து 23 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் புதிதாக 2665 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். அதில் 1805 பேர் கல்லூரி முடித்த புதியவர்கள். அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை 13%ஆக இருக்கிறது. இது கடந்தாண்டு 12.4%ஆக இருந்தது. நான்காம் காண்டு முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து எச்.சி.எல் நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் 0.26%உயர்ந்து 1,485 ரூபாயாக விற்கப்பட்டது.