காப்பீட்டு நிறுவனங்கள் போட்டா போட்டி..

இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் விதிகளை மாற்ற புதிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பஜாஜ் அலியான்ஸ் நிறுவனத்தின் 24 ஆண்டுகள் பந்தம் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில் கூட்டு நிறுவனத்தில் இருந்து பிரிந்த அலியான்ஸ் நிறுவனம், முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனான்சியல் நிறுவனத்துடன் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. வெறும் முதலீட்டாளராக இல்லாமல், இயங்கும் நிறுவனமாக திகழவும் அளியான்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி, தரம்பால், சத்யபால் குழு மாக்மா பொது காப்பீட்டு நிறுவன பங்குகளில் பெரும்பகுதியை வாங்கியுள்ளது. இதன்மூலம் பதஞ்சலி நிறுவனமும் காப்பீட்டுத்துறையில் கால்பதிக்கிறது. இதேபோல் பிரபல மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்கிக் குவித்துள்ளது. காப்பீட்டுத்துறையில் 100 விழுக்காடு வரை வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானதால், பிரிட்டனைச் சேர்ந்த நிவா பூபா நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்பட்டபோது காப்பீட்டுத்துறைக்கு 82,847 கோடி முதலீடுகள் கிடைத்தன. இந்நிலையில் 74 விழுக்காட்டில் இருந்து காப்பீட்டு நிறுவனங்களின் வெளிநாடடு நேரடி முதலீடு தற்போது 100விழுக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளால் இந்தியாவில் காப்பீட்டுத்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் ஆரோக்கியமான போட்டி நிலவும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். காப்பீட்டுத்துறையில் தற்போது பெரியளவில் வளர்ச்சி இல்லை என்றபோதும், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், பெரிய வளர்ச்சியை காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24 காலகட்டத்தில் மட்டும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிரீமியம் தொகையாக 8.,3லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியால் அடுத்த 5 ஆண்டுகளில் காப்பீட்டுத்துறையில் வேகமாக வளரும் ஜி20 நாடாக இந்தியா மாறும் சூழல் உருவாகியுள்ளது. காப்பீடு அல்லாத வணிகம் 5.7விழுக்காட்டில் இருந்து 7.3 விழுக்காடாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.