பாகிஸ்தானுக்கு தொடர்ந்து செல்லும் இந்திய பொருட்கள்..

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி வணிக ஒப்பந்தம் ரத்தானது. இந்த நிலையில், 3 ஆவது நாடுகள் வழியாக பாகிஸ்தானுக்கு 10பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்திய பொருட்கள் தொடர்ந்து செல்வதாக உலகளாவிய வணிக ஆராய்ச்சி முன்னெடுப்பான Gtri புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இருந்து, துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக இந்த பொருட்கள் பாகிஸ்தானுக்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து எடுத்துச்செல்லப்படும் பொருட்கள் இடைப்பட்ட நாடுகளின் பெரிய கிடங்குகளில் சேமிக்கப்பட்டு அதன் பின்னர் துபாயில் இருந்து தயாரிக்கப்பட்டு விற்பதாக பாகிஸ்தானுக்கு அனுப்புவதாக கூறப்படுகிறது. உதாரணமாக இந்தியாவில் இருந்து 1லட்சம் டாலருக்கு ஒரு பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டால், அது துபாயில் 1லட்சத்து 30ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்ற விலைக்கு உயர்த்தப்பட்டு பாகிஸ்தானை சென்றடைகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அட்டாரி எல்லை மூடப்பட்டதுடன், சார்க் விசா நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு தூதரகங்களிலும் பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே செல்லும் சிந்து நதி நீரை பகிரும் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. 1960 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், கடந்த 22 ஆம் தேதி தாக்குதல் நடந்ததால் உடனடியாக ரத்துசெய்யப்பட்டது.