25% லாபம் பார்த்த எல் அன்ட் டி…

கட்டுமானம் மட்டுமின்றி பல துறைகளில் முன்னோடியாக இருக்கும் எல் அன்ட் டி நிறுவனம் கடந்தாண்டின் கடைசி காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனத்தின் மொத்த காலாண்டு லாபம் மட்டும் 25%உயர்ந்து 5,497 கோடி ரூபாயாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இதே காலகட்டத்தில் கடந்தாண்டில் வெறும் 4,396 கோடி ரூபாயாக இருந்துள்ளது. மார்ச்சுடன் முடிந்த காலாண்டில், அந்நிறுவனத்தின் வருவாய்11%உயர்ந்து 74,392 கோடி ரூபாயாக இருக்கிறது. இது மட்டுமின்றி அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கலந்து ஆலோசித்து ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடண்ட்டாக 34 ரூபாய் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 ஆம் தேதி இந்த டிவிடண்ட்டுக்கு ரெக்கார்ட் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் மொத்த லாபம் 15 %உயர்ந்து 15,037 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது 2023-24 காலகட்டத்தில் 13,059 கோடி ரூபாயாக இருந்துள்ளது. மொத்தம் 3.56லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான ஆர்டர்களை எல் அன்ட் டி நிறுவனம் பெற்றுள்ளது. 18%வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றுள்ளது. விமான நிலையங்கள், வணிக கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகளை அந்நிறுவனம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் சர்வதேச ஆர்டர்கள் மட்டும் 2.07லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்தாண்டு மிகச்சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக அமைந்ததாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்ரமண்யன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.