ஐபிஓ பணிகளை நிறுத்தி வைத்த எல்ஜி..

உலகின் பல நாடுகளிலும் தங்கள் மின்சாதன பொருட்கள் விற்று பிரபலமடைந்த எல்ஜி நிறுவனம், இந்தியாவில் தனது ஆரம்ப பங்கு வெளியிடும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்திய சந்தைகளில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எல்ஜி நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தென்கொரியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், இந்திய அதிகாரிகளுக்கு ஒரு அறிவுறுத்தலை செய்துள்ளது. அதில் ஆரம்ப பங்கு வெளியீட்டு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
மேலும் சந்தை நிலைமை சீரானதும் அந்த சூழலுக்கு ஏற்ப பணிகளை செய்யவும் அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இந்திய பங்குச்சந்தைகளில் நிலையற்ற சூழல் இருந்ததால் ஆரம்ப பங்கு விலைகளை ஏதெர் போன்ற நிறுவனங்கள் குறைத்துக்கொண்டன. ஏதெர் நிறுவனம் இலக்கு மதிப்பில் இருந்து 44 விழுக்காடு குறைத்தது. அதே போல் புதிய பங்குகளை விற்கும் விகிதத்தையும் ஏதெர் நிறுவனம் 15 விழுக்காடு குறைத்துக்கொண்டது. அடுத்தடுத்து பெரிய நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளியிடாமல் பின்வாங்குவதால் இந்திய சந்தைகளில் முதலீடுகள் குவிவது குறைந்துள்ளது.