கார் வாங்க போறீங்களா, மாருதி கார் விலை ஏற போகுது..

மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை வரும் ஜனவரி முதல் 4 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்ளீட்டுப்பிரிவுக்கான கட்டணம் உயர்வு, நிர்வாக செலவுகள் உள்ளிட்டவை விலையேற்றத்துக்கு முக்கியக்காரணிகளாக அந்நிறுவனம் பட்டியல் இட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிக அழுத்தம் தராமல் கட்டணத்தை சிக்கனமாக வைக்க முயற்சிப்பதாக கூறியுள்ள அந்த நிறுவனம், வரும் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆல்டோ என்ற சிறிய கார் தொடங்கி இன்விக்டோ என்ற பெரிய கார்கள் வரை மாருதி சுசுகி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இவற்றில் சில கார்கள் இந்தியாவில் மட்டும் கிடைக்கின்றன. சில ரகங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்கனவே வரும் ஜனவரியில் இருந்து தங்கள் நிறுவன கார்களின் விலையை உயர்த்தப்போவதாக ஹியூண்டாய் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடுத்தர வருவாய் உள்ள மக்கள் பயன்படுத்தும் கார்கள் மட்டுமின்றி, சொகுசு கார்களான மெர்சிடீஸ் பென்ஸ், ஆடி உள்ளிட்ட கார்களும் தங்கள் நிறுவனத்தில் உற்பத்தியாகும் கார்களின் விலைகளை அடுத்த மாதம் உயர்த்த இருக்கின்றன.,