ரிசர்வ் வங்கி அறிவிப்பால் பலனடைந்த நிறுவனங்கள்..

தங்க நகைகளை அடகு வைப்பது தொடர்பான வரைவு அறிக்கையை ரிசர்வ் வங்கி அறிவிக்க இருக்கும் நிலையில், தங்க நகைக்கடன் நிறுவனங்களான முத்தூட் ஃபைனான்ஸ், ஐஐஎப்எல் ஆகிய நிறுவன பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நேற்று அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது தங்க நகைக்கடன் தொடர்பான விதிகளை இறுக்குவது குறித்து தாம் எந்த அறிவிப்பையும் சொல்லவில்லை என்று கூறினார். தங்க நகைக்கடன் விதிகளை கடுமையாக்குவதற்கு பதிலாக முறைப்படுத்த மட்டுமே ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பால் முத்தூட் , மணப்புரம், ஐஐஎப்எல் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் பங்குகள் 10 விழுக்காடு வரை உயர்ந்தன. முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 98 விழுக்காடு கடன்கள் தங்க நகைக் கடன்களாகவே இருக்கிறது. மணப்புரத்தில் 50 விழுக்காடும், ஐஐஎப்எல் நிறுவனத்தின் மொத்த கடன்களில் 21 விழுக்காடும் தங்க நகைக்கடன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மணப்புரம் நிறுவனத்தின் பியூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் பிரிவு வணிகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதில் இனி புதிய பங்குகளை வாங்க முடியாது.