ரெபோ வட்டி விகிதம் 0.25%குறைப்பு..

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கு பெயர் ரெபோ வட்டி விகிதம். இந்த ரெபோ வட்டி விகிதத்தை 0.25விழுக்காடு குறைத்து 6 விழுக்காடாக நிர்ணயித்தது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியில் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதி கொள்கை குழு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கொள்கைக்குழு கூட்டம் கடந்த 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நேற்று வெளியிட்டார். அதில்,ரெபோ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை குறைக்க ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக அறிவித்தார். வருங்காலங்களில் இன்னும் வட்டி விகிதத்தை குறைக்கும் வகையில் நியூட்ரல் நிலையில் இருந்து அகாமடேட்டிவ் நிலைக்கு மாற்றுவதாகவும் மல்ஹோத்ரா தெரிவித்தார். கடந்த ஃபிப்ரவரி மாதம் இதே பாணியில் 25 அடிப்படை புள்ளிகளை ரிசர்வ் வங்கி குறைத்திருந்தது. இந்தாண்டில் இரண்டாவது முறையாகவும், நடப்பு நிதியாண்டின் முதல் வட்டி குறைப்பாகவும் இது உள்ளது. நுகர்வோர் பணவீக்கம் முன்னதாக 4.2விழுக்காடாக கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 4விழுக்காடாக நடப்பு நிதியாண்டில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். யுபிஐ பரிவர்த்தனைகளில் பரிவர்த்தனை வரம்பை நிர்ணயிக்கவும் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் முடிவெடுத்திருப்பதாக சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கி தனது ரெபோ வட்டி விகிதத்தை குறைத்ததால் வாகனம், தனிநபர், வீட்டுக் கடன் வட்டி மற்றும் தவணை காலம் குறையும் என்று கூறப்படுகிறது.