தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லாபம் 15விழுக்காடு உயர்வு..

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் லாபம் கடந்த காலாண்டில் 15 விழுக்காடு உயர்ந்து 292 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023-24 நிதியாண்டில் 253 கோடி ரூபாயாக இருந்தது. 2025ஆம் நிதியாண்டில் டெபாசிட் மற்றும் கடன் வழங்கும் விகிதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த வங்கி அதிகாரிகள், 2024 நிதியாண்டில் 1072 கோடியாக இருந்த இந்த பரிவர்த்தனைகள், கடந்த நிதியாண்டில் 10 விழுக்காடு உயர்ந்து 1183 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. புதிதாக 26 கிளைகளை திறந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் எம்.டி. சலீ எஸ் நாயர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறையில் தங்கள் வங்கியை மாற்றும் பணிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிலையான வளர்ச்சியை எட்டுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செயல்பாட்டு லாபம் மட்டும் கடந்த ஒரு நிதியாண்டில் ஆயிரத்து 746 கோடி ரூபாயாக இருக்கிறது. வட்டியாக மட்டும் 5,291 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 98 ஆயிரத்து 55கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் நடப்பதாகவும் அந்த வங்கி கூறியுள்ளது.
வங்கியின் டெபாசிட் 53,689 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த மதிப்பு 9ஆயிரத்து 9 கோடி ரூபாயாக இருக்கிறது. ஒவ்வொரு 10 ரூபாய் முகப்பு மதிப்பு கொண்ட பங்குக்கும், 11 ரூபாய் டிவிடண்ட்டாக வழங்கலாம் என்று அந்த வங்கியின் இயக்குநர்கள் குழு முடிவெடுத்துள்ளது. எனினும் இதற்கு இன்னும் பங்குதாரர்கள் இறுதி ஒப்புதல் தரவில்லை.