ஐபோன் கேசிங் உற்பத்தியை அதிகரிக்கும் டாடா..

ஐபோனை உற்பத்தி செய்து வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தனது ஓசூர் ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. சரியாக சொல்லவேண்டுமானால் இரட்டிப்பாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது வரை அந்த ஆலையில் 50 ஆயிரம் ஐபோன்கள் மட்டுமே அசம்பிள் செய்யப்படுகின்றன. ஒரே வளாகத்தில் இரண்டாவது ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகளும் துரிதகதியில் நடந்து வருகின்றன. இந்த சூழலில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்கள்தான் அமெரிக்காவில் அதிகம் விற்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் விற்பனையாகும் ஐபோன்கள் இந்தியாவிலும், வியட்நாமில் உற்பத்தியாகும் ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்டவையும்தான் அமெரிக்காவில் விற்கப்படுகிறது என்றார். பெகட்ரான், விஸ்ட்ரான் நிறுவனங்களின் செயல்பாட்டு உரிமைகளை டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அண்மையில் கைப்பற்றியது. இந்த நிலையில் உற்பத்தியை 1லட்சம் ஐபோன்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையராக ஜபில் நிறுவனம், ஏர்பாட்ஸ்களின் கேசிங் உற்பத்திக்கான ஆர்டர்களை பெற்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வணிகப்போருக்கு மத்தியில் சீனாவில் இருந்து உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் வேறு நாடுகளுக்கு மாற்றி வருகிறது. இந்தசூழலில் இந்த வாய்ப்பை இந்தியா சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பெங்களூருவில் பெரிய ஆலை உள்ள நிலையில், ஐதராபாத்தில் ஏர்பாட்ஸ் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த நிலையில்தான் இந்தியாவில் உற்பத்தி மற்றும் அசம்பிள் செய்யும் ஆலைகளை ஆப்பிள் அதிகரித்து வருகிறது.