கடந்த காலாண்டில் கலக்கிய டைட்டன்..

டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் டைட்டன் நிறுவனம் கடந்த காலாண்டில், 871 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 771 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 12.97%உயர்ந்துள்ளது. நகை முதல் வாட்ச் வரை விற்பனை செய்யப்படும் இந்த கடையில், கடந்த காலாண்டில் வருமானம் மட்டும் 15ஆயிரத்து 032 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 12,653 கோடி ரூபாயாக இருந்தது. தங்கள் வணிகம் 22%உயர்ந்துள்ளதாக கூறியுள்ள அந்நிறுவன எம்.டி. வெங்கடராமன்,கடந்த ஒரு நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வணிகத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். என்னதான் டிஜிட்டல் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச்கள் என்று வந்துவிட்டபோதிலும் அனலாக் வாட்சுக்கு மவுசு குறையவில்லை என்று குறிப்பிட்ட வெங்கடராமன், கேரட் லேன் என்ற நகைப்பிரிவு மொத்த வருவாயில் 23%பங்களிக்கிறது. கல்பதித்த நகைகளின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 19%உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தங்க நகை மற்றும் தங்க நாணயங்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. கேரட் லேன் பிரிவு மட்டும் எபிட் எனப்படும் வருவாயாக 70 கோடி ரூபாயை ஈட்டியிருக்கிறது. கேரட் லேனின் பெயரில் தற்போது இந்தியா முழுக்க 139 நகரங்களில் 322 கடைகளை திறந்துள்ளது.கடந்த 3 மற்றும் நான்காம் காலாண்டில், கண் தொடர்பான வணிகமும் இரட்டை இலக்கத்தில் உள்ளது. மாறிக்கொண்டே இருக்கும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது முயற்சிகளை தாங்களும் முன்னெடுக்க தயாராக இருப்பதாக வெங்கடராமன் குறிப்பிட்டார்.