டிவிஎஸ் நிறுவன 4 ஆம் காலாண்டு அப்டேட்..

பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4 ஆவது காலாண்டு லாபம் 68 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிகர லாபம் மட்டும் 648 கோடியே 10லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024 கடைசி காலாண்டில் இருந்த 387 கோடி ரூபாயை விட 68 விழுக்காடு அதிகமாகும். செயல்பாட்டு வருவாயாக இந்நிறுவனத்தின் வருவாய் 11,542 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கரம் மற்றும் மூன்ற சக்கர வாகனங்களின் விற்பனை 14 விழுக்காடு உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்தம் 12.16லட்சம் வாகனங்களை அந்த நிறுவனம் விற்றுள்ளது. கடந்த 2024 கடைசி காலாண்டில் வெறும் 10.63 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டன. மோட்டர் சைக்கிள் பிரிவு 10 விழுக்காடும், ஸ்கூட்டர்கள் பிரிவு விற்பனை 27 விழுக்காடும் உயர்ந்துள்ளன. அந்த நிறுவனத்தின் மொத்த நிதியாண்டு லாபம் 32.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. செயல்பாட்டு வருவாய் 38,778 கோடி ரூபாயில் இருந்து 44,089 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமை 2.48 விழுக்காடு உயர்ந்து ஒரு பங்கு 2803 ரூபாயாக உயர்ந்துள்ளது. இடைக்கால டிவிடன்ட்டாக ஒரு பங்குக்கு 10 ரூபாய் அளிக்கவும் டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 475 கோடி ரூபாய் நிதி ஒதிக்கப்பட்டுள்ளது.