GST தொடர்பாக அரசாங்கத்தை வறுத்தெடுத்த ஆர் சி பார்கவா, வேணு ஸ்ரீனிவாசன்; அரசின் பதில் என்ன?
அரசாங்கம் தான் சொன்னதைச் செய்யவில்லை என்று வாகன தொழில் உற்பத்தியின் ஜாம்பவான்கள் குற்றம் சாடியுள்ளனர். தில்லியில் நடந்த ஒரு தொழில்துறை நிகழ்ச்சியில் மாருதி சுஸுகியின் தலைவரான ஆர் சி பார்கவாவும் டிவிஎஸ் மோட்டார்ஸின் தலைவரான வேணு ஸ்ரீனிவாசனும் அரசாங்கம் ஆட்டோ துறைக்கு ஆதரவு தரும் நோக்கத்துடன்தான் செயல்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினர். இந்த உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்; பின்னர் அவரது முறை வந்தபோது பதில் அளித்தார். வரிகள் குறைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்த இந்த ஆட்டோ ஜாம்பவான்கள், இந்தியாவில் கார்கள் இன்னும் பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடியும் ஆடம்பர வசதி எனும் எண்ணத்தில், இந்தியாவின் வளர்ச்சிக்கு தொழில்துறையின் பங்களிப்பு ஒருவேளை கொள்கை வகுப்பாளர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என தங்களது ஏமாற்றத்தை தெரிவித்தனர்.
“வாகனத் துறையின் முக்கியத்துவத்தை குறித்து பலரும் பேசியுள்ளனர். ஆனால் இந்த போக்கின் சரிவை மாற்றியமைக்கும் உறுதியான நடவடிக்கையின் அடிப்படையில், தளத்தில் நான் எதையும் பார்க்கமுடியவில்லை. வெறும் வார்த்தைகளால் மட்டும் விற்பனையில் முன்னேற்றம் எட்டிவிடாது” என்று அஞ்சுவதாக பார்கவா கூறினார். பலரும் இது பஜாஜை நோக்கி விடப்பட்ட அம்பு என்று கருதினர். ஏனெனில், வருவாய் துறையின் செயலராக, நேரடி மற்றும் மறைமுக வரி தொடர்பான கட்டுப்பாடுகளை மேற்பார்ப்பவராக பஜாஜ் இருப்பதனால் அவ்வாறு பார்க்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் 2020-21 நிதியாண்டில் ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனை அளவுகள் இந்த தொழிற்துறையை ஆறு வருடங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) கூறுகிறது.
பயணிகள் வாகனங்கள் 2015-16க்கு பிறகும், இரு சக்கர வாகனங்கள் 2014-15க்கு பிறகும், 11 ஆண்டுகளுக்கு பிறகு கனரக வாகனங்களும், கடந்த 19 ஆண்டுகாலத்தில் மூன்று சக்கர வாகனங்களும் 2020-21 நிதியாண்டில் தான் மிக மோசமான விற்பனை அளவை அடைந்துள்ளன. இதற்கெல்லாம் காரணமாக ஜிஎஸ்டி மற்றும் சாலை வரி உயர்வு போன்ற வளர்ச்சியை சீர்குலைக்கும் போக்கால் வாகன விலை உயர்ந்துவிட்டதாக குற்றம் சாட்டியது SIAM.
உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன தொழில்துறை இந்தியாவினுடையது, ஏழையின் போக்குவரத்து பங்காளனாய் பெரிதும் விளங்கும் இருசக்கர வாகனத்திற்கான ஜிஎஸ்டி யும் சொகுசு வாகனங்களுக்கும் ஒரே மாதிரியானதாக உள்ளது. இலகுரக இருசக்கர வாகனத்தின் விலை 50% வரை உயர்ந்துள்ளது. சுற்றுச்சூழல், வருவாய் மற்றும் அந்நிய செலாவணிக்குப் பங்களித்ததற்காக ஆட்டோ துறை அங்கீகரிக்கப்படுகிறதா? என்று பார்கவா வினவியதை எதிரொலித்தார் ஸ்ரீநிவாசன்.
தொழில் வளர்ச்சி தடைப்படுவதற்கு வரி விதிப்புதான் காரணமா என்று கேள்வி எழுப்பியதுடன், “ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு, பரவலாக வாகன சந்தைகளில் வரிவிதிப்பு அமைப்பு என்ன? வரிவிதிப்பு அமைப்பு குறைவாக இருந்ததா? என்பதை புரிந்துகொள்ள விரும்புகிறேன், மேலும் இப்போதைவிட கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த வரிகள் உண்மையில் தொடர்புடைய வாகன விற்பனையில் அதிகரிப்புக்கு வழிவகுக்குமா என்பதை அறியாமல் எங்களால் வரிகளை குறைக்க முடியாது.” என்றார் பஜாஜ். மேலும், எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன்பு 360 டிகிரி கோணத்தில் பார்க்கவேண்டியுள்ளது, வரிகளை குறைப்பதனால், அரசு மேலும் கடன் வாங்க நேரிடும் அது பேரியல் பொருளாதார பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்றார் பஜாஜ்.
தொழில்துறைக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் முன்னாள் துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான வரிகளை அரசாங்கம் மிக அதிகமாக வைத்திருப்பதாகக் கூறினார், இதனால் அவருடைய நிறுவனம் விரிவாக்கம் பெறுவது கடினமாக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் நிதி அமைச்சகம், ஆட்டோ நிறுவனங்கள் வரி குறைப்பைப் பெறுவதற்குப் பதிலாக வெளிநாடுகளில் உள்ள தாய்நிறுவனத்திற்கு ராயல்டி கொடுப்பதை குறைக்க வேண்டும் என்று பதிலளித்தது. இப்போது எழுந்துள்ள கேள்விகள் உள்நாட்டு நிறுவனங்களிலிருந்து. என்ன செய்யப்போகிறது அரசு?