கூகுள், ஃபோன்பே ஆதிக்கத்தை தடுக்கிறதா இந்திய அரசு..?

இந்தியாவில் ஃபோன்பே மற்றும் கூகுள் நிறுவனங்களின் மூலமாக யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மக்கள் அதிகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு புதிய நிதி நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் கைகோர்க்க இருக்கிறது. என்பிசிஐ எனப்படும் தேசிய பணப்பரிவர்த்தனை கழக அதிகாரிகள் இது பற்றி விவாதிக்க கிரிடெ், ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளில் கூகுள் மற்றும் ஃபோன்பே நிறுவனத்தினரின் பங்களிப்பு 86 விழுக்காடாக இருக்கிறது. இந்த சந்தையில் பேடிஎம் 3 ஆம் இடத்தில் இருக்கிறது. பேடிஎம் நிறுவன செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 13 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கட்டுப்பாடுகளே.. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்களிப்பை 30 விழுக்காடுக்கு மேல் வைக்கக்கூடாது என்றும் என்பிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இந்த 30 விழுக்காடு அளவு வரும் டிசம்பருக்குள் நடைமுறை படுத்தவும் நிறுவனங்களை என்பிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. புதிய நிதிநுட்ப நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் சில சலுகைகளையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்க என்பிசிஐ திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய நிதிநுட்பங்களை வளர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு அரசை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.