விண்ணை தொடும் விலைவாசி – எகிறும் சில்லறை பணவீக்கம்..!!
உணவுப்பொருள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக, சில்லறைப் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.01% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்-CPI தகவல்:
நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் (Customer Price Index) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதத்தில் 6.01% உயர்ந்துள்ளதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உயர்வு கடந்த 7 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணவீக்கம் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4.06%-மாகவும், 2021ஜுன் மாதத்தில் மிக அதிக அளவாக 6.26%-மாகவும் காணப்பட்டது. அதன் பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விலைஉயர்வு:
இதன் விளைவாக 2022 ஜனவரி மாதத்தில் சமையல் எண்ணெய் விலைகள் 18.70 சதவீதமும், இறைச்சி மற்றும் மீன் விலை 5.47 சதவீதமும், காய்கறிகளின் விலை 5.19 சதவீதமும், பருப்பு மற்றும் பொருட்களின் விலை 3.02 சதவீதமும் உயர்ந்துள்ளது.
மேலும் உணவு மற்றும் பானங்கள் தவிர, எரிபொருள் 9.32 சதவீதமும், ஆடை மற்றும் காலணிகள் 8.84 சதவீதமும், வீடுகள் பிரிவு 3.52 சதவீதமும் அதிகரித்துக் காணப்பட்டன.
அண்மையில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில், ஏப்ரல் 2022 இல் தொடங்கும் அடுத்த நிதியாண்டில், பணவீக்கம், 4.5 சதவீதத்துக்கு கீழே வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மத்திய வங்கி நடப்பு நிதியாண்டில் அதன் பணவீக்க கணிப்பை 5.3 சதவீதமாக வைத்துள்ளது.