அந்த பணம் மாநில அரசுகளுக்கு கிடையாது பாஸ்…
தற்போதுள்ள சட்டப்படி தேசிய பென்ஷன் திட்டத்தில் சேமிக்கப்பட்டுள்ள தொகை மாநில அரசுகளுக்கு அளிக்கப்படாது என்று மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. தேசிய பென்ஷன் திட்டத்தில் சேமிக்கப்பட்டுள்ள தொகை மாநில அரசுக்கு கிடைக்கும் என்று எதாவது மாநில அரசுகள் எதிர்பார்த்திருந்தால் அது நடக்காத காரியம் என்று அண்மையில் நிதித்துறை செயலர் விவேக் ஜோஷி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதனை மீண்டும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேசிய பென்ஷன் திட்டத்தில் பணம் செலுத்தப்பட்டு அது பங்குச்சந்தையில் தவறாக முதலீடு செய்யப்பட்டால் அதனை மாநிலங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும் மத்திய அரசின் கருணையில் எந்த மாநிலமும் இருக்கக்கூடாது என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாகவே மத்திய அமைச்சர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய பென்ஷன் திட்டத்தில் உள்ள தொகையை பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மாற்றத் தவறினால் உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் அசோக் கெலாட் தெரிவித்திருந்தார். புதிய சட்டத்தில் தேசிய பென்ஷன் திட்டத்தில் மாநில அரசு உரிமை கோர முடியாது என்றும் நிதித்துறை செயலர் தெளிவுபடுத்தியுள்ளார்.