முதன் முதலாக இலகுவான எலக்ட்ரிக் வணிக வாகன (e-LCV) உற்பத்தியில் களமிறங்கும் அசோக் லேலண்டின் பிளான் என்ன?
அசோக் லேலண்ட் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது கமர்ஷியல் வணிக வாகனங்கள் தான்; இப்பொழுது அவர்கள் இலகுவான எலக்ட்ரிக் வணிக வாகனங்களையும் (e-LCV – Light Commercial Vehicle) உற்பத்தி செய்யப் போகிறார்கள். இந்த எலக்ட்ரிக் வாகனம் இங்கிலாந்தைச் சேர்ந்த Switch Mobility- யுடன் சேர்ந்து தயாரிக்கப்படவிருக்கிறது. அசோக் லேலண்ட் சுவிட்ச் மொபிலிட்டியில் இன்வெஸ்ட் செய்திருக்கிறது என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.
சுவிட்ச் மொபிலிட்டி அதன் முதல் இலகுவான எலக்ட்ரிக் வணிக வாகனத்தை இந்தியாவில் டிசம்பருக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது; ஏற்கனவே 2,000 ஆர்டர்களை பெற்றிருக்கிறது. இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சுவிட்ச் பிராண்டிங்கின் கீழ் விற்கப்படும். அடுத்த சில ஆண்டுகளில் எலக்ட்ரிகல் வாகன தயாரிப்பில் $150-200 மில்லியன் முதலீடு செய்ய இந்த குழு திட்டமிட்டுள்ளது.
அசோக் லேலண்ட், ஸ்விட்ச் மொபிலிட்டியில் சுமார் $136 மில்லியன் முதலீடு செயதுள்ளது, மேலும் ஸ்விட்ச் மொபிலிட்டி எதிர்காலத்தில் தனது சொந்த மூலதனத்தை திரட்ட அசோக் லேலண்ட் எதிர்பார்க்கிறது. ஸ்விட்ச் மொபிலிட்டி முற்றிலும் கார்பன் இல்லாத இயக்கத்தை (net-zero carbon mobility) வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. அசோக் லேலண்ட், தான் புதிதாக மேற்கொண்டுள்ள மின்சார வாகன சேவையில் பேருந்துகள் மற்றும் இலகுவான (light) வாகனங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்தும்; மின் கார்களில் அல்ல என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.
உலகளாவிய மின்சார பஸ் சந்தை 2030 க்குள் சுமார் $70 பில்லியனை எட்டும் என்று எதிர்பாக்கப்படுகிறது. லீட்ஸில் (Leeds) உள்ள அதன் வசதிக்கு மேலதிகமாக, நம் நாட்டில் தற்போதுள்ள வசதிகளைப் பயன்படுத்தி இந்தியாவை உற்பத்தி மையமாக்குவதே ஸ்விட்ச் மொபிலிட்டியின் நோக்கம். ஏற்கனவே இ-பஸ்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றை வழங்குவதற்காக இங்கிலாந்து மற்றும் இந்தியா முழுவதும் டெண்டர்களில் பங்கேற்கப் போவதாகவும் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.