திரும்ப சேர்த்துக்கொண்ட ஏர் இந்தியா நிறுவனம்..

அண்மையில் ஏர் இந்தியா விமானங்களின் விமானிகள் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்ததால் 90 விமான சேவைகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்த 25 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. இதனை கண்டித்து விமான ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாக 25 பேரையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தொழிலாளர் ஆணையர் அலுவலகம் டெல்லியில் உள்ளது. அந்த அலுவலகத்தில் வைத்து விமான ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.இதையடுத்து பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பியுள்ளனர். 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திடீரென உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்தனர். இதனால் புதன்கிழமை 90 விமானங்களும், வியாழக்கிழமை 85 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை டாடா குழுமம் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் ஒரே நேரத்தில் பணியாளர்கள் விடுப்பு எடுத்ததால் இத்தனை பிரச்சனை ஏற்பட்டது. போதிய சம்பள உயர்வு இல்லாததால் கடந்த மாதமும் இதே பாணியில் விமானிகள் போராட்டம் நடத்தினர். இதனால் விஸ்தாரா நிறுவனம் கடந்த மாதம் 25 விழுக்காடு விமானங்களை ரத்து செய்தது. விஸ்தாராவுடன் இணைப்பதற்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மேற்கு ஆசிய நாடுகளுக்கு சென்று வந்தன. அவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. இணைப்புக்கு பிறகு உள்ளூர் விமானங்களையும் இயக்கச்சொல்லி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. விஸ்தாரா நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட பிறகு 20 விழுக்காடு வரை தங்கள் சம்பளம் குறைந்துவிட்டதாக பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.