நாங்கள் வளர்கிறோம்- டாடா பவர் சிஇஓ..
டாடா பவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் பிரவீர் சின்ஹா. இவர் தங்கள் நிறுவனம் அடுத்த வருடம் மற்றும் அதற்கு அடுத்த வருடங்களில் அதிக வளர்ச்சி பெறும் பயணத்தில் செல்வதாக கூறியுள்ளார். அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் நல்ல முடிவுகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் டாடா பவர் நிறுவனம் 40ஆயிரம் கோடி ரூபாய் பணம் முதலீடு செய்திருப்பதாகவும் 2025 நிதியாண்டில் மட்டும் மேலும் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதில் பாதி அளவுக்கு புதுப்பிக்கத் தக்க ஆற்றல் சார்ந்த வணிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் பத்திரிகைக்கு சிறப்பு பேட்டியளித்துள்ள அவர், கடந்த 18 காலாண்டுகளாக தங்கள் நிறுவனம் நல்ல லாபம் பார்த்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஆற்றல் துறையின் தேவை கணிசமாக உயர்ந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 2 மாதங்களில் மட்டும் ஆற்றல் துறையின் வளர்ச்சி 10 விழுக்காடு உயர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களிலும் ஏசி பயன்பாடு அதிகரிப்பே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 5.5 ஜிகாவாட் அளவுக்கு ஆற்றல் கட்டமைப்பு அடுத்த 24 மாதங்களில் முடிந்து விடும் என்று அவர் தெரிவித்தார். ஏராளமான பிராஜக்ட்களை எடுத்துள்ள டாடா பவர் நிறுவனம், ஏற்கனவே கையில் எடுத்துள்ள பணிகளை முதலில் முடிக்க வேண்டும் என்று பிரவீர் தெரிவித்துள்ளார்.