5 ஆண்டுகளாக கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு..

கடந்த 5 நிதி ஆண்டுகளில் 500 மற்றும் 2000 ரூபாய்கள்ளநோட்டுகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக போலியான 500 ரூபாய் நோட்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் 300 விழுக்காடு உயர்ந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்து உள்ளது. கடந்தாண்டு மே மாதம் திரும்பப்பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளிலும் 166 விழுக்காடு அதிக கள்ள நோட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்ட நிலையில் 500 ரூபாய் நோட்டுகளின் போலி நோட்டுகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக பழைய 500மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு , அதற்கு மாற்றாக 2,000 ரூபாய் நோட்டுகளும், புதிய 500 ரூபாய் நோட்டுகளும் அமலாகின. 98 விழுக்காடு 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பிவிட்டதாகவும், 6970 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் திரும்ப வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கள்ளநோட்டுகள் நிதித்துறைக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கள்ளச்சந்தை தனியாக ஒரு பொருளாதாரத்தையே நடத்துவதாகவும், அது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய சிக்கலாகவும் மாறியுள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தால் நல்ல நோட்டுகள் தேவை குறைந்து, பணவீக்கம் அதிகரிக்கும். சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் இந்த கள்ளநோட்டுகள் வழிவகுத்து விடுகின்றன. பிடிபட்ட கள்ளநோட்டுகள் மட்டுமே இத்தனை விழுக்காடு என்றால் புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டுகள் எத்தனை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துமோ என்று அரசுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.